விக்ரமாதித்தன் கதைகள்

வாரிசை தேர்ந்தெடுக்க துறவி வைத்த போட்டி

கதைகள்

வாரிசை தேர்ந்தெடுக்க துறவி வைத்த போட்டி மந்திரவாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க காட்டிலிருந்த உடலை விக்ரமாதித்தியன் சுமந்து சென்றுகொண்டிருக்கும் போது, அந்த உடலுக்குள் இருந்த வேதாளம் விக்ரமாதித்தியனிடம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. 

சொர்ணபுரி நாட்டை வீரபாகு என்ற மன்னன் சீறும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. எனவே தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான்.

அப்போது இந்நாட்டின் எல்லையில் இருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என கூறினார். அதன் படி மன்னன் வீரபாகுவும், அவனது மந்திரியும் அந்த ஆசிரமதிற்கு சென்று தங்களின் எண்ணத்தை அந்த துறவியிடம் கூறினர். இதை கேட்ட அந்த துறவி, தான் அவர்களுக்கு உதவுவதாக கூறி, தனது ஆசிரமத்தின் மிகச் சிறந்த வீரர்களான ராமன், ஜெயன், கௌதமன் என்ற மூவரையும் அழைத்து, ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்குமாறும், ஒரு மாதத்திற்கு பிறகு இந்த ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தங்களின் அனுபவத்தை கூற வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.

ஒரு மாதத்திற்கு பிறகு அந்த மூவரும் ஆசிரமத்திற்கு திரும்பினர். அங்கு மன்னன் வீரபாகுவும் அவனது மந்திரியும் அந்த துறவியுடன் இருந்தனர். அப்போது ராமன், தான் இந்த ஒரு மாத காலம் வடதிசை நோக்கி பயணித்ததாகவும், அப்போது ஒரு நாட்டின் மன்னனுக்கு எதிராக சில இளைஞர்கள் ஒருவனின் வழிகாட்டுதலின் படி புரட்சியில் ஈடுபட, காட்டின் மறைவான இடத்தில் ஆயுத பயிற்சி மேற்கொண்டிருந்ததாகவும், எனவே அக்கூட்டத்தின் தலைவனை தான் அம்பெய்தி கொன்று விட்டதாகவும் கூறினான். இப்போது ஜெயன், தான் தென் திசையை நோக்கி பயணித்ததாகவும், அந்த திசையின் பல இடங்களில் கொள்ளையர்களின் அட்டகாசங்கள் அதிகமிருந்ததால் அங்குள்ள இளைஞர்களுக்கு, தான் வாள் போர் கலையை கற்றுத்தந்து அவர்கள் தங்களை தற்காத்து கொள்ள தான் உதவியதாக கூறினான்.

மூன்றாவதாக கௌதமன், தான் கிழக்கு திசையை நோக்கி பயணித்ததாகவும், தனது வீரத்தை காட்டக்கூடியதற்குண்டான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லையென்றாலும் வழியில் காட்டின் ஓரத்திலுள்ள ஒரு குளத்தில் ஒரு குட்டி யானை சிக்கி தவித்ததைக் கண்டு, தான் அந்த ஊர் மக்களின் உதவியுடன் அந்த குட்டி யானையை மீட்டு அதன் கூட்டத்தில் சேர்த்ததாகவும், பிறகு மக்கள் அனைவருக்கும் பிறருடன் சண்டையிடாமல் வாழ்வதை பற்றி அறிவுரை கூறியதாகவும் கூறினான். இதையெல்லாம் கேட்ட வீரபாகுவும், அவன் மந்திரியும் வீரம் நிறைந்த காரியங்கள் செய்த ராமன், ஜெயன் ஆகிய இருவரில் ஒருவரை தங்கள் வாரிசாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தாலும் அந்த துறவியின் கருத்தை கேட்க விரும்பினர்.

சிறிது நேரம் ஆலோசித்த பின்பு கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்கும் படி கூறினார் அந்த துறவி. “விக்ரமாதித்தியா அந்த துறவி கௌதமனை வாரிசாக தேர்ந்தெடுக்க கூறியது ஏன்? எனக் கேட்டது வேதாளம்.

“ராமன் ஜெயன் புரிந்தது வீரமிக்க செயல்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் ஒரு நாட்டை நிர்வகிக்க வெறும் வீரம் மட்டும் போதாது. அம்மக்களிடம் உள்ள ஏற்ற, தாழ்வுகளை நீக்கி அவர்களிடம் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படுத்தும் திறன் வேண்டும். அது கௌதமனிடம் அதிகமிருந்தது. மேலும் கௌதமனுக்கு வீரத்தை காட்டக் கூடிய சூழ்நிலை தான் அமையவில்லையே தவிர அவன் ஒன்றும் கோழையல்ல. எனவே கௌதமனை வாரிசாக ஏற்கும் படி அந்த துறவி கூறினார்” என விக்ரமாதித்தியன் கூறிய பதிலைக் கேட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

 192 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *