விக்ரமாதித்தன் கதைகள்

விக்ரமாதித்தன் கதை – யார் உண்மையான தந்தை

கதைகள்

விக்ரமாதித்தன் கதை  –  யார் உண்மையான தந்தை வேதாளத்தை தனது முதுகில் சுமந்து காட்டின் வழியே  வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம், வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது.

ஜெயநகர் என்ற நாட்டில் மாயன் என்ற வாலிபன் இருந்தான். இவன் திருடுவதை தனது தொழிலாக கொண்டிருந்தான். அப்படி ஒரு முறை இரவு நேரத்தில் திருடுவதற்கு அந்த ஊரில் சுற்றி திரிந்த போது, இரவு பணியிலிருந்த காவலர்கள் அவனை பார்த்ததும் பிடிப்பதற்காக துரத்தினர். அவர்களிடம் இருந்து ஓடி தப்பிக்க முயன்று அருகிலிருந்த வீட்டின் ஒரு அறையில் புகுந்து ஒளிந்து கொண்டான் மாயன். அப்போது அந்த அறையிலிருந்த சுகந்தி என்ற திருமணமாகாத இளம் பெண் அவனை பார்த்து விட்டாள். ஆனாலும் வெளியிலிருந்த காவலர்களிடம் மாயனை அவள் காட்டிக்கொடுக்கவில்லை. இதனால் சுகந்தி மீது மாயனுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. சுகந்தியும் ஏதோ ஒரு காரணத்திற்காக அவனிடம் ஈர்க்கப்பட்டாள்.

பிறகு தினமும் அந்த இரவு வேளையில் அவர்களின் சந்திப்பு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் மிக நெருங்கி பழகிய காரணத்தால் சுகந்தி கர்ப்பமடைந்தாள். இதை அறிந்த மாயனும் அவளை தாம் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தான். ஆனால் எதிர்பாராத விதமாக மாயன் ஒரு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் சமயம், காவலர்கள் அவனை கைது செய்ய முயன்ற போது அவர்களுடன் ஏற்பட்ட சண்டையில் இறந்து போகிறான். இதைக் கேள்விப்பட்ட சுகந்தி மிகுந்த அதிர்ச்சியடைந்தாள். அதே நேரத்தில் சுகந்தியை ஜெயன் என்பவனுக்கு திருமணம் செய்ய அவளது பெற்றோர்கள் எண்ணினர். சுகந்தியும் தனது கர்ப்பத்தை மறைத்து ஜெயனை திருமணம் செய்து கொண்டாள். பின் பத்து மாதத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்து அது ஜெயனுக்கும் தனக்கும் பிறந்த குழந்தை தான் என ஜெயன் உட்பட அனைவரையும் நம்ப வைத்துவிட்டாள்.

அந்த ஆண் குழந்தைக்கு நகுலன் என்று பெயரிட்டு இருவரும் பாசத்துடன் வளர்த்து வந்தனர். சில வருடங்களில் நகுலனின் தந்தை ஜெயன் இறந்துபோனார். அப்போது நன்கு வளர்ந்து இளைஞனாகி விட்ட நகுலன், இறந்துபோன தனது தந்தை ஜெயனுக்கு கங்கை கரையில் திதி கொடுக்கும் பூஜையை செய்து அந்த திதி பிண்டத்தை கங்கை நீரில் விட சென்ற போது, இரண்டு கைகள் நீருக்குள்ளிருந்து தோன்றியது. அதில் ஒன்று ஜெயனுடையது மற்றொன்று மாயனுடையது. இரண்டும், தானே நகுலனுடைய தந்தையென்றும், தனக்கே திதி பிண்டத்தை தருமாறு கேட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நகுலன் தனது தாய் சுகந்தியிடம் இதை பற்றி கூறினான். அப்போது சுகந்தி நகுலனின் உண்மையான தந்தை மாயன் தான் என்ற உண்மையை கூறினாள். இப்போது யாருக்கு இந்த திதி பிண்டத்தை அளிப்பது என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான் நகுலன்.

“விக்ரமாதித்தியா நகுலன் அந்த பிண்டத்தை யாருக்கு அளிக்க வேண்டும்? எனக் கேட்டது வேதாளம். “திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே ஒரு பெண்ணை கர்பமாக்கிய தவறை செய்தவன் மாயன். மேலும் நகுலன் பிறக்க காரணமாக மாயன் இருந்தானே தவிர, ஒரு தந்தைக்குண்டான கடமை எதையும் நகுலனுக்கு செய்யவில்லை. அது போல தான் கர்பமடைந்ததை மறைத்து ஜெயனை திருமணம் செய்து மிகப் பெரும் துரோகத்தை ஜெயனுக்கு செய்தாள் நகுலனின் தாய். அதே நேரத்தில் ஜெயன், நகுலன் தன் மகனென்று கருதி அவனுக்கு சிறந்த தந்தையாக வாழ்ந்து மறைந்தான். இவை எல்லாவற்றையும் தீர ஆலோசிக்கும் போது ஜெயனே அந்த பிண்டத்தை பெறும் தகுதியுடையவன் ஆகிறான்” எனும் பதிலை விக்ரமாதித்தியன் கூறியவுடன் அந்த வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

 147 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *