சதகுப்பை மூலிகை மருத்துவ பயன்கள்

சதகுப்பை மூலிகை மருத்துவ பயன்கள்!!!!!

nattu maruthuvam உணவு நலம் வாழ்வு நலம் நாட்டு மருத்துவம்

சதகுப்பை மூலிகை மருத்துவ பயன்கள்!!!!! சதகுப்பை கீரை கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது. பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு. சீரகச் செடியைப் போல நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். ஒவ்வொரு காம்பிலும் நூற்றுக்கணக்கான மலர்கள் தோன்றும். அதனால் இது “சதபுஷ்பா” என்று பெயர் பெற்றது.


இந்தச் செடி எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. மலர்களில் விதைகள் தோன்றும். பழுத்ததும் தனியாகப் பிரிக்கப்படும். இலை இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் வெப்பத்தை அதிகரிக்கும். லகு குணம் வெப்பத்தன்மை கொண்டது. சடராக்கினிக் குறைவையும் கிருமிகளையும் போக்கும். விந்துவைக் குறைக்கும். இதயத்திற்கு நன்மை தரும். மலத்தைக் கட்டும். இதன் வேரும் விதைகளும் மருந்தாகப் பயன்படுகின்றன. சூடு இருமல், வாந்தி, கபம், வாதம், பெண் குறியில் தோன்றும் நோய்கள் முதலியவற்றைப் போக்கும் மருத்துவக் குணம் உடையது.
சதகுப்பை கீரை சமையலுக்கு பயன்படுத்தலாம். சதகுப்பை கீரையின் விதைதான் சதகுப்பை. இது சிறந்த மருத்துவதன்மை கொண்டது.
சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது. இதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய்தான் காரணம். இவை தசைகளை தளரச் செய்து வலியை நீக்கும்.
சதகுப்பை குழந்தைகளுக்கான வயிற்றுவலி மருந்துகள், ஜீரணத்தை மேம்படுத்த உதவும் மருந்துகள், வலி மருந்துகள், பிரசவத்திற்கு பின் கொடுக்கப்படும் லேகியங்கள், சளி இருமல் மற்றும் தலைவலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.
குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படும்போது, சதகுப்பை கீரை சாறு 20 மி.லி. அளவுக்கு எடுத்து, ஒரு தேக் கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், வலி நீங்கும். பிரச வித்த தாய்மார்களுக்கு இந்த கீரையை சமைத்து கொடுத்தால் கருப்பை அழுக்குகள் வெளியேறும். ஜீரணமும் சீராகும்.
சளியுடன் கூடிய தலைவலி, காதுவலி, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி சதகுப்பையை 200 மி.லி. நீரில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பருகுங்கள்.
பிரசவித்த காலகட்டத்தில் பெண்கள் இது போல் தயாரித்து பருகினால் வயிற்றுக்கு இதமாக இருக்கும். வலி நீங்கும். ஜீரணம் மேம்படும். சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருக்காது. உடல் எடையும் அதிகரிக்காது.


மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சதகுப்பை, எள், கருஞ்சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனைவெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினம் இருவேளை சாப்பிட்டுவர வேண்டும். இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும். அந்த காலகட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும். கருப்பையும் பலமடையும்.


கைக்குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று தொந்தரவு ஏற்படும். பால் ஜீரணமாகாமல் வாந்தி எடுக்கும். இந்த அவஸ்தைகளால் அவ்வப்போது அழுதுகொண்டே இருக்கும். இதற்கு அரை தேக்கரண்டி சதகுப்பை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வறுத்து 100 மி.லி. நீரில் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஊட்டவேண்டும். இதை தினம் இருமுறை புதிதாக தயார் செய்து புகட்டவேண்டும். ஒரு மாத குழந்தைக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம். மாதம் ஆக ஆக அளவை அதிகரித்துக் கொள்ளலாம். இது எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.
சதகுப்பை விதையை இடித்துப் பொடியாக்கி 30 கிராம் எடுத்து 500 மில்லி வெந்நீரில் ஊற வைத்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், பெரியவர்களுக்கு உண்டாகும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், குணமாகும். இத்துடன் சுண்ணாம்பு தெளிந்த நீரைச் சிறிது சேர்த்துக் கொடுக்க இது அதிகப் பலனைக் கொடுக்கும்.


சதகுப்பை, கருஞ்சீரகம், மர மஞ்சள் இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக பொடி செய்து, பின் அதனுடன் பனைவெல்லம் சேர்த்து அரைத்து 5 கிராம் அளவுக்கு காலை, மாலை இருவேளையும் சாப்பிடுங்கள். பின் 5 நிமிடம் கழித்து சோம்பு குடிநீர் குடித்து வர கருப்பை பலம்பெறும். கர்ப்பம் தரிக்க செய்யும்.

 156 total views,  2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *